வத்திராயிருப்பு வரலட்சுமி விரதத்தில் வளைகாப்பு வழிபாடு
வத்திராயிருப்பு: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வத்திராயிருப்பில் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு, வளைகாப்புடன் மாரியம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
வத்திராயிருப்பு கீழரத வீதி மாரியம்மன் கோயிலில் அப்பகுதி பெண்களால் வரலட்சுமி விரத வழிபாடு நடத்தப்பட்டது. காலையில் அம்மனுக்கு 18 வகை அபிஷேகம் நடந்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் அம்மனுக்கு கிரீட அலங்காரம், வளையல்களால் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோயில் முன் குழந்தை பேறு இல்லாத பெண்கள், கர்ப்பிணிகள் அமரவைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அவர்களுக்கு அம்மன் அணிந்திருந்த வளையல்கள், மாங்கல்ய கயிறு, காப்புக்கயிறு வழங்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை மகளிர் கமிட்டி நிர்வாகிகள் தனலட்சுமி, திருப்பதி, தமிழ்செல்வமாரி, அனிதா, செல்வி, மாரியம்மாள் செய்தனர்.