சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் தொடக்கம்: குவிந்தனர் பக்தர்கள்!
சபரிமலை: சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் தொடங்கியது. மலையாள ஆண்டு பிறப்பை ஒட்டி,லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை ஐந்து மணிக்கு திறந்தது. மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.
வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று(ஆக.17) அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபஷேகம் நடத்தினார். தொடர்ந்து நெய்யபிஷேகம் ஆரம்பமானது. ஆவணி மாதம் மலையாள ஆண்டு பிறப்பு என்பதால் அதிகாலையில் நடை திறந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மழை பெய்து கொண்டிருந்தாலும் பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று தரிசனம் நடத்தினர்.
மலையாள ஆண்டு பிறப்பை ஒட்டி கேரளாவில் அனைத்து கோயில்களிலும் காலை முதல் மாலை வரை நோன்பு பிரார்த்தனை வேள்வி நடைபெற்றது. சபரிமலையில் இந்த வேள்வியை தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஐயப்பனின் அகண்டநாமம் பாடப்பட்டது. இதையொட்டி தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் லட்சார்ச்சனையும் நடைபெற்றது. வரும் 21ம் தேதி இரவு பத்து மணி வரை நடை திறந்திருக்கும்.