உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணதேவராயர் கால தங்க காசு கண்டெடுப்பு: நாணயவியல் சங்க இயக்குனர் தகவல்

கிருஷ்ணதேவராயர் கால தங்க காசு கண்டெடுப்பு: நாணயவியல் சங்க இயக்குனர் தகவல்

சேலம்: சேலத்தில், கிருஷ்ணதேவராயர் கால தங்க காசு கண்டெடுக்கப்பட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் பயன்பாட்டுக்காக, பாதுகாக்கப்படுகிறது, என, சேலம் பாராமஹால் நாணயவியல் சங்கத்தின் இயக்குனர் சுல்தான் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணதேவராயர் விஜயநகர பேரரசின் இரண்டாம் ஹரிஹரன், கி.பி., 1377 - 1404ல் பலவித தங்க காசுகளில், உமாமேசுவரம், லட்சுமிநாராயணர், லட்சுமி, நரசிம்மர், சரசுவதி, பிரம்மன் உருவங்கள் பொறித்த, தங்க காசுகளை மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார். அந்த காசுகள், விஜயநகர அரசுகளின் வளர்ச்சியையும், மன்னர்களின் ஆயுட்காலங்களையும் குறிப்பிட்டுள்ளன. அந்த காசுகளின் எடை, 0.37 மில்லி கிராம். இந்தியாவின் பொற்காலத்தை பதிவு செய்தவரும், விஜயநகர பேரரசின் தலைநகரமாக இருந்த ஹம்பி, உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. அந்த சிறப்பு கொண்ட தங்க காசு, தற்போது, சேலத்தில் கண்டெடுக்கப்பட்டு, பாராமஹால் நாணயவியல் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை, வரலாற்று ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோன்று, விஜயநகர பேரரசுளால் வெளியிடப்பட்ட கத்யனா, வராஹன், பொன், பணம், ஹக என்ற காசுகள் உள்ளன. தவிர, ஜிடல் எனும் பெயரில் வெளியிடப்பட்ட, வெள்ளி காசுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !