விநாயகர் சிலைகள் கரைப்பது எப்போது?
திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் சிலைகளை, நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில், 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை கரைக்க, ÷ பாலீசார் அனுமதி அளித்து உள்ளனர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
விநாயகர் சிலைகளை வைப்பவர்களுக்கு போலீசார் வழங்கி உள்ள அறிவுரைகள்:
* ஏழு அடி உயரத்திற்கு மிகாமல் சிலைகளை அமைக்க வேண்டும்
* போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* ஒலிபெருக்கியை விழா நாளன்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைக்க அனுமதியில்லை
* களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்
* பொதுமக்களுக்கு, போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் சிலைகள் வைக்கப்பட வேண்டும்
* எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் சிலைகள் அருகே வைக்கக் கூடாது
* கொட்டகை அமைக்காமல், தகர கூரை அமைக்க வேண்டும்
* விநாயகர் சிலைகளை, வரும் 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை நீர்நிலைகளில் கரைக்கலாம். இவ்வாறு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.