தேவிபட்டினம் நவபாஷாணம் உண்டியல் வசூல் ரூ.74 ஆயிரம்
தேவிபட்டினம், : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.74 ஆயிரம் வசூலானது. இக்கோயில் பரிகார பூஜைகளுக்கும், பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பிரசித்திபெற்றது என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயில் கடந்த 2015 அக்., 30 முதல் இந்து அறநிலையத்துறை வசமானது. இதையடுத்து கோயிலில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நேர்த்தி கடனாக கடலுக்குள் காசுகள் வீசுவதை கட்டுப்படுத்தும் விதமாக நவபாஷாணத்தில் இரண்டு நிரந்தர உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்திவருகின்றனர். இந்நிலையில் இரண்டு உண்டியல்களும் கோயில் தக்கார் இளங்கோவன், ஆய்வாளர் சுந்தரேஸ்வரி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.74 ஆயிரம் வசூலானது. உண்டியல் எண்ணும் பணியில் திருகோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.