வெயிலுகந்த விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் சதுர்த்தி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா ஆக.,27ல் கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர் மூசிக, சிம்ம, மயில், யானை, ரிஷப வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் குருக்கள் ஆதிரெத்தினம், ரவிக்குமார் திருமணம் நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணமக்களை தரிசித்தனர். திருமணத்திற்கு பின் மொய் விருந்தாக பக்தர்களுக்கு கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பக்தர்கள் விநாயகருக்கு மொய் பணம் எழுதினர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேவியருடன் விநாயகர் மணக்கோலத்தில் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.