பிள்ளையார்பட்டி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படையல்!
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு, தீர்த்தவாரி நடந்தது. விநாயகருக்கு, மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டது. விழாவையொட்டி தினமும் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர், கோவிலை வலம் வந்தார். பின், கோவில் குளத்தின் தெற்கு கரையில் எழுந்தருளினார். தலைமை குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், வேத மந்திரங்கள் முழங்க, விநாயகரின் சக்தி ஸ்துலமான அங்குசத்தேவருக்கு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீதர் குருக்கள், அங்குசத்தேவருடன் மூன்று முறை குளத்தில் மூழ்கி, தீர்த்தவாரி நடத்தினார். உற்சவருக்கு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தங்க கவசத்தில், மூலவர் அருள்பாலித்தார். மதியம், 1:50 மணிக்கு, மூலவருக்கு, மெகா கொழுக்கட்டை முக்குருணி மோதகம் படையலிடப்பட்டது. இரவு, ஐம்பெரும் கடவுள்கள், வாகனத்தில் வீதி உலா வந்தனர்.