ஆன்மிகம், தமிழ் மொழியின் பாலம் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தின் சேவை
மதுரை, :மதுரை பைபாஸ் ரோடு ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் ஆன்மிகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பாலமாக விளங்கி சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இம்மடத்தின் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் அதிகாலை, மாலை நேரங்களில் கடம், மிருதங்கம், வயலின் போன்ற ஏதாவது ஒரு இசை கருவியின் ஓசை பின்னணியில், வித்வான்களில் பஜன கான கோஷ்டிகள் தங்களுக்கே உரிய கம்பீரமான வெண்கல குரலில் பக்தி பாடல்களை பாடி தேனிசை விருந்து படைப்பது முக்கிய நாட்களில் நடக்கும் சம்பிரதாயங்களில் ஒன்று.
இன்னிசை விருந்தில் இடம் பெற வேண்டி இசை ரசிகர்கள், பக்தர்கள் போட்டி போட்டு இருக்கைகள் தேடுவர்.அது மட்டுமா மார்கழி மாதம் வந்து விட்டாலே ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் ஆன்மிக கொண்டாட்டத்தின் களமாக மாறி விடுகிறது. அதிகாலை துவங்கும் சிறப்பு பூஜைகளுக்கு இடையே ஆன்மிக பக்தி சொற்பொழிவாளர்கள், வித்வான்கள் தினம் காலை, மாலையில் சிறப்பு பக்தி சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருவது ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தின் தனிச்சிறப்பு. மடத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு குறையொன்றுமில்லை எனும் தலைப்பில் பனையூர் ராஜாராம் ஆன்மிக பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்குகிறது. மாதந்தோறும் முதல் ஞாயிறு அன்று ஆன்மிக தொடர் சொற்பொழிவு இம்மடத்தில் நடக்கிறது. இப்படி ஆன்மிகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஓசையின்றி செய்து வரும்ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தின் சேவை போற்றுதலுக்குரியது.