பல கோடி ரூபாய் கோவில் சொத்துக்கள்...ஸ்வாகா! அறநிலைய அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி
காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் உள்ள சிவலோகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் விற்பனை செய்துள்ளது குறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதால், கோவில் நிலங்கள் விரைவில் மீட்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனுறை சிவலோகநாத சுவாமி கோவிலுக்குச் சொந்தமான விளை நிலங்களில் பெரும் பகுதி மனைகளாக்கி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக, இந்து அறநிலையத் துறைக்கு புகார்கள் குவிந்தன. அதன்பேரில் பரம்பரை அறங்காவலர் செந்தில்நாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் இருவர் லால்பேட்டை பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் தலா 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய தோப்பு மற்றும் குப்பச்சி குள தோப்பு பெரும்பகுதியை பலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட அய்யனார் கோவில் தோப்பை தனிநபர் ஆக்கிரமித்து கோவிலுக்குச் செல்லும் பாதையை அடைத்து நிலத்தை மனையாக்கியிருப்பது தெரியவந்தது. கோவிலுக்கு குறைந்த தொகையை செலுத்தி வந்த பல நிலங்கள், மனைகளாக மாற்றி விற்பனை செய்திருப்பதும், அந்த நிலங்கள் அனைத்தும் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. லால்பேட்டை மெயின் ரோட்டில் 66 சென்ட் இடத்தில் 10 வீடுகள் கட்டியிருப்பதும், நகரின் பிரதான பகுதிகளில் உள்ள கோவில் நிலங்கள் பலருக்கு விற்பனை செய்திருப்பதும், கொல்லிமலை கீழ்பாதி பகுதியில் 36 சென்ட் காலி மனையை, மனைப்பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் அனைத்தும், வருவாய் துறையின் பதிவேட்டில், கோவிலுக்குச் சொந்தமான இடம் என்ற குறிப்பையே அகற்றப்பட்டுள்ளதால், இந்த முறைகேடு அனைத்தும், வருவாய் துறையினரின் ஆதரவுடனே நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்து அறநிலையத் துறையினர் இனியும் அலட்சியம் காட்டாமல், விரைந்து செயல்பட்டு, மனைகளாக மாற்றி விற்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்பதோடு, கோவில் சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.