நவராத்திரி கொலுவில் பத்மநாபபுரம் கோவில் பொக்கிஷம்
தர்மபுரி : நவராத்திரி விழாவையொட்டி, தர்மபுரி, அப்பாவுநகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலுவில், திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில் மற்றும் அதிலுள்ள பொக்கிஷ அறைகள், பொக்கிஷங்கள் ஆகிய பொம்மை வடிவங்களை அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி, அப்பாவு நகரை சேர்ந்த டாக்டர் சுரபி வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கொலுவில் பல்வேறு சிறப்பு அம்சங்களையுடைய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது படிகள் மற்றும் ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி பூஜையில், முதல் மூன்று நாட்கள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும், ஒன்பது படிகளில் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை கொண்ட கொலு பொம்மைகள், சிகரெட் பெட்டிகள் மற்றும் சிகரெட்டை பயன்படுத்திய பொம்மைகள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி, அவ்வையாருக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்தது உள்பட பல்வேறு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. கொலு பொம்மைகளில் பல்வேறு வடிவங்கள் மற்றும் நடப்பு செய்திகளை விளக்கும் கருத்துள்ள பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.