புரட்டாசி பிரமோற்சவ விழா : பழநி பூக்கள் கேட்கும் திருமலை!
பழநி: திருப்பதியில் நடைபெற உள்ள புரட்டாசி பிரமோற்சவ விழாவிற்கு பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம் அக்., 1 முதல் பூக்களை அனுப்பிவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம் திருப்பதி புரட்டாசி பிரமோற்சவ விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மதுரை, நிலக்கோட்டை, திருச்சி பகுதிகளிலிருந்து பூக்கள் சேகரித்து, டன் கணக்கில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாண்டு திருப்பதியில் அக்.,3 முதல் 11வரை பிரமோற்சவம் நடக்க உள்ளது. இவ்விழாவிற்காக அக்.,1 முதல் 9 வரை வாடாமல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் ஒவ்வொருநாளும் எத்தனை கிலோ தேவைப்படுகிறது என்பதை திருப்பதி திருமலை தேவஸ்தானம், பழநி புஷ்ப கைங்கர்யா சபாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி பூக்கள் அனுப்ப சபா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சபா நிர்வாகி மருதசாமி கூறியதாவது: 14 ஆண்டுகளாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். இவ்வாண்டு பிரமோற்சவ விழாவுக்காக செப்.,30ல் முதற்கட்டமாக துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை சேகரித்து அனுப்ப உள்ளோம்.
புரட்டாசி சனிக்கிழமை, பிற விசேஷ நாட்களிலும் திருப்பதி தேவஸ்தானம் ஆர்டரின் பெயரில் பூக்களை சேகரித்து அனுப்ப உள்ளோம். பழநி--திருப்பதி பஸ் சேவை நிறுத்தம் காரணமாக, இப்பூக்களை திண்டுக்கல்லில் இருந்து அனுப்பவேண்டியுள்ளது. பழநியில் இருந்து திருப்பதி பஸ் சேவையை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். திருப்பதிக்கு பூக்களை அனுப்ப விரும்புவோர், 94434 -03026 ல் தொடர்பு கொள்ளலாம்.