ஆஸ்திரேலியாவில் இருந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் சிலை மீட்பு!
புதுச்சேரி: புதுச்சேரி பிரஞ்சு ஆவணக் காப்பகத்தின் உதவியால், ஆஸ்திரேலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்த, விருத்தகிரீஸ்வரர் கோவிலின் பிரத்தியங்கராதேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலுார் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர், பிரத்தியங்கராதேவி கற்சிலைகள், பல ஆண்டுகளுக்கு முன் திருடுபோனது. இச்சிலைகள், ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. சோழர் காலத்தை சேர்ந்த இந்த பழமையான சிலைகள், 900 ஆண்டுகள் பழமையானது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் ஆஸ்திரேலிய அரசின் அருங்காட்சியகத்திற்கு இந்த கற்சிலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் கபூரை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த பிறகு இத்தகவல் வெளியானது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அர்த்தநாரீஸ்வரர் சிலை இந்தியா கொண்டு வரப்பட்டது. பிரத்தியங்கராதேவி கற்சிலை, இந்தியாவிற்கு சொந்தமானது என நிரூபிக்க முடியவில்லை. கடந்தாண்டு புதுச்சேரி வந்த ஆஸ்திரேலியா குழுவினர், புதுச்சேரி பிரஞ்சு ஆவணக் காப்பகத்தில் ஆய்வு செய்த போது, 1974ம் ஆண்டு எடுக்கப்பட்ட பிரத்தியங்கராதேவி சிலையின் புகைப்படம் மற்றும் ஆவண ஆதாரங்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து, பிரத்தியங்கராதேவி சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முன்வந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா சென்ற, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம், ஆஸ்திரேலிய நாட்டின் கலைத்துறை அமைச்சர் மிட்ச்ப்பில்ட், பிரத்தியங்கராதேவி சிலையை வழங்கினார். புதுச்சேரியில் உள்ள பிரஞ்சு ஆவண காப்பகத்தின் உதவியால், 900 ஆண்டுகள் பழமையான பிரத்தியங்கரா தேவி சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருவது குறிப்பிடத் தக்கது.