உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மண்ணில் தயாராகும் விளாச்சேரி கொலு பொம்மைகள்

மதுரை மண்ணில் தயாராகும் விளாச்சேரி கொலு பொம்மைகள்

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி, அரசியல் தலைவர்களின் சிலைகள், அகல் விளக்குகள், மெகா விநாயகர் சிலைகள், கிறிஸ்தவ குடில்களை களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் ஆகியவற்றால் 3 இஞ்ச் முதல் 15 அடிவரை தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் சிலைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. நவராத்திரியை முன்னிட்டு தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ராமலிங்கம் கூறியதாவது: பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது நவராத்திரிக்காக வழக்கமாக தயாரிக்கப்படும் தசாவதாரம், கல்யாணம், அஷ்ட லட்சுமி உள்ளிட்ட 120 செட் கொலு பொம்மைகளுடன் இந்த ஆண்டு பாலாம்பிகை, வைரமுடி பெருமாள், ரங்கநாதர் சிலைகள் தயாரித்துள்ளோம். களிமண் பொம்மைகள் நுாற்றாண்டுகளானாலும் அப்படியே இருக்கும். சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். வீட்டு அலங்காரத்திற்காக பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கிறோம். பல கோயில்களில் இச் சிலைகள் விற்பனைக்கு உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !