கொலு பொம்மை விற்பனை "ஜோர்
திருப்பூர்: முப்பெரும் தேவியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழா, அக்., 2ல் துவங்குகிறது. நவராத்திரியின் போது, வீடுகள், கோயில்களில் கொலு பொம்மைகள் வைத்து, பூஜித்து, வழிபடுவது வழக்கம். இதற்காக, விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. நவராத்திரி நெருங்கியுள்ள நிலையில், திருப்பூரில் கொலு பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தமிழ்நாடு சர்வோதய சங்கத்தில், கண்கவர் வடிவங்களில், கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஐயப்பன், கண்ணன், கிருஷ்ணன், விநாயகர், முருகன், ராமனின் பத்து அவதாரங்கள், பத்து தலை ராவணன், துலாபாரம், ஆறுபடை வீடு, வெண்ணை குடத்துடன் கண்ணன், கோபியர் நடனம், அப்துல் கலாம், காந்தி, பாரதி, திருவள்ளுவர், கேரளா கதகளி உள்ளிட்டவை, இதில் இடம் பெற்றுள்ளன. சர்வோதய சங்க விற்பனையாளர்கள் கூறுகையில், "மதுரையில் இருந்து களி மண், காகிதக்கூழில் செய்யப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டை விட, இம்முறை பல்வேறு வகையிலான பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தூங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை எழுப்ப காத்திருக்கும் அரசவையினர்; இட்லி கடை, பல்வேறு மதங்களை சேர்ந்த உழைப்பாளர்கள் உள்ளிட்ட புதுவரவு, பலரையும் கவர்ந்துள்ளது. ரூ.50 முதல், 6,000 ரூபாய் வரை, கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன என்றனர்.