உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சலோக சிலைகள் மீட்பு: கோர்ட்டில் ஒப்படைப்பு!

பஞ்சலோக சிலைகள் மீட்பு: கோர்ட்டில் ஒப்படைப்பு!

தஞ்சாவூர்: அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட, அரியலுார் மாவட்ட கோவிலுக்கு  சொந்தமான  பஞ்சலோக சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டன.  அரியலுார் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலிலும், ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோவிலிலும், 28 பஞ்சலோக சிலைகள், 2006 - 2008ல் காணாமல் போனது. இது குறித்து தமிழக சிலை, கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  விசாரித்து வந்தனர்.  இந்த சிலைகளை கடத்தியதாக, அமெரிக்காவில்  அருங்காட்சியகம் நடத்தி வரும், இந்தியரான, சுபாஷ் சந்திர கபூரை,  சர்வதேச போலீஸ் உதவியுடன், தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரதமர் மோடி,  அமெரிக்கா சென்றபோது,  ஸ்ரீபுரந்தான் கோவிலுக்கு சொந்தமான  விநாயகர், மாணிக்கவாசகர் சிலைகளை, அந்நாட்டு போலீசார் ஒப்படைத்தனர். இந்த சிலைகளை, மத்திய அரசு அதிகாரிகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  கடந்த வாரம், சுத்தமல்லி கோவிலுக்குரிய பூதேவி, சக்கரத்தாழ்வார் சிலைகளையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நான்கு ஐம்பொன் சிலைகளை,  அந்தந்த கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மக்களிடமும், பூஜை செய்யும் பட்டாச்சாரியார், குருக்களிடம் கேட்டனர். இதில்,  அந்த கோவிலுக்கு சொந்தமானது தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு சிலைகளையும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். நீதிபதி பாஸ்கரன் ,நான்கு சிலைகளின் உயரம், எடை ஆகியவற்றை அளவீடு செய்து பார்வையிட்டார். பின், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், வழக்கு முடியும் வரை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சிலைகளை பாதுகாப்பு மையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து சிலை, கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர், அசோக்நடராஜ் கூறுகையில், அரியலுார் மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில், 28 சிலைகள் காணாமல் போய் உள்ளது. இதில், ஏழு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள சிலைகளும், அமெரிக்காவில் உள்ள கபூரின் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதையும், மீட்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகிறோம்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !