சபரிமலையில் அரிவராசனம் பாடி யேசுதாஸ் மனமுருகி பிரார்த்தனை!
சபரிமலை: பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஆனால் மிகப்பெரிய ஐய்யப்ப பக்தர். சபரிமலைக்கு தொடர்ந்து விரதமிருந்து மாலை அணிந்து சென்று வருகிறார். ஐய்யப்பன் மீது அவர் பாடியுள்ள அரிவராசனம் மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு நாளும் ஐய்யப்பன் கோவில் நடை சாத்தப்படும்போது யேசுதாஸ் பாடிய அரிவாரசனம் பாடலுக்கு பிறகே அந்த நிகழ்வு நடைபெறும். அரிவாரசனம் ஐய்யப்பனை தூங்க வைப்பதாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக யேசுதாஸ் சபரிமலை செல்லவில்லை. சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் மனம் சோர்ந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் யேசுதாஸ் நேற்று முன்தினம் சபரிமலைக்கு பம்பை பாதை வழியாக பாதயாத்திரையாக சென்றார். கோவிலின் அனைத்து சன்னிதானத்திலும் வழிபட்ட யேசுதாஸ் கடைசியாக மூலஸ்தானம் வந்தார். அப்போது நடை சாத்தப்படும் நேரமும் நெருங்கியதால் தினமும் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படும் அரிவராசனம் பாடலை ஒலிபரப்பாமல். யேசுதாஸ் நேரடியாக ஐய்யப்பன் சன்னிதானம் முன்னால் நின்று அரிவராசனம் பாடினார். இது பார்ப்பவர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.