சேலத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் கோலாகலம்!
ADDED :3336 days ago
சேலம்: சேலத்தில், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்தது. ராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, முக்கிய ஊர்களில், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று மாலை, சேலம் ரத்னவேல் ஜெயகுமார் திருமண மண்டபத்தில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதற்காக, நேற்று அதிகாலையிலேயே, ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமானின், மலையப்ப சுவாமி உற்சவமூர்த்தி மற்றும் ராமானுஜ உற்சவமூர்த்தி ரதங்கள், திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சேலம் வந்தன. தேவஸ்தான பட்டாச்சாரியார் உள்ளிட்ட, 71 உறுப்பினர்கள் ரதோச்சவ குழுவாக வந்து, திருக்கல்யாண வைபவத்தை நடத்திக்கொடுத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.