பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம்
ADDED :3283 days ago
செவ்வாய்பேட்டை: சேலத்தில், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. சேலம், செவ்வாய்பேட்டை, பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், 13வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை மூலவர், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உட்பிரகாரத்தில், மூலவர் எழுந்தருளி காட்சியளித்தார். ஒன்பதாவது நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. காலை 9 மணியளவில், பெண்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்து, வழி நடத்தினர். சந்தைப்பேட்டை, செவ்வாய்பேட்டை பஜார், அப்புச்செட்டிதெரு, கபிலர் தெரு உள்பட பிரதான சாலைகளில் வலம் வந்த தேர், மதியம், 2:00 மணியளவில், நிலையை அடைந்தது. மாலை, 6:00 மணியளவில், சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.