மழை பெய்ய வேண்டி ஒப்பாரி வைத்து பெண்கள் வழிபாடு
ADDED :3323 days ago
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை, கொண்டையம்பள்ளி, கெங்கவல்லி, பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி, மஞ்சள், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவை, முக்கிய பயிராக சாகுபடி செய்கின்றனர். தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதியில், இரு ஆண்டுகளாக மழை இல்லாததால், விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. பருவ மழையும் பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, மழை பெய்ய வேண்டி, தம்மம்பட்டி அருகே, கோனேரிப்பட்டியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், சுவேத நதிக்கரையில் கும்மியடித்து, ஒப்பாரி பாடல்களை பாடி, வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கூழ் காய்ச்சி, தெய்வங்களுக்கு, படையல் வைத்தனர்.