ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறப்பு : புதிய மேல்சாந்தி தேர்வு!
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்தது. வரும் 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5.30-க்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான நெய்யபிஷேகம். உதயாஸ்மனபூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், களபாபிஷேகம் போன்ற பூஜைகள் நடைபெற்றது. 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் வரும் 20-ம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு அஷ்டபந்தனகலசம் நடக்கிறது. 21-ம் தேதி இரவு பத்து மணி வரை நடைதிறந்திருக்கும். 20, 21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது.
வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு புதிய மேல்சாந்தி தேர்வு இன்று காலை 7.30-க்கு கோயில் முன் நடைபெற்றது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 21-ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக இம்மாதம் 28-ம் தேதி மாலை நடை திறக்கும். 29-ம் தேதி இரவு பத்து மணிக்கு அடைக்கப்படும்.