நம்பயமும் வென்றிடுவார் நானிலத்தே வேண்டும் அருள் தரும் முத்துமாரியம்மன்!
சிவகங்கை: காரைக்குடி முத்துப்பட்டணம் மீனாட்சிபுரத்தில் பொலிவோடு அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோயில். இது ஒரு பிரார்த்தனை தலம். தன்னை வேண்டுவோர்க்கு வேண்டும் வண்ணம் அருள்பாலிப்பவள் முத்துமாரி.
தல வரலாறு: நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழும் செட்டிநாட்டு சீமையின் முக்கிய ஊர் காரைக்குடி. இந்த நகரை சொர்க்க பூமியென காத்து வருகிறாள் அன்னை முத்துமாரி. இவள் அகில உலகத்திற்கும் அருள்பாலிக்கும் வகையில் ஒரு லீலையை நிகழ்த்தினாள். அவள் செய்த அந்த திருவிளையாட்டை நினைத்தாலே ஆனந்தக்கண்ணீர் சுரக்கும். மகிழ்ச்சி பெருகும். 1956, நவ. 8-ல் லலிதா என்ற பெயருடன் 8-வயது சிறுமியாக மீனாட்சிபுரத்திற்கு அம்பாள் வந்தாள். அந்தச் சிறுமியின் மேனி முழுவதும் அம்மை படர்ந்திருந்தது. தனியாக வந்த சிறுமியை அன்புடன் வளர்த்தார் தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார். தெய்வப்பணிவிடை செய்வதே தொழிலாக கொண்ட அவர், லலிதாவை கண் போல கவனித்து வந்தார். சிலநாட்களில் சிறுமியிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளெல்லாம் அருள் வாக்காக அமைந்தது. சொல்லியதெல்லாம் பலித்தது. அவள் பல அற்புதங்களை நிகழ்த்தினாள். அவள் அள்ளித்தந்தவை ஆனந்தம் தந்தது. அச்சிறுமியின் அற்புத செயலை அனைவரும் கண்டு ஆனந்தித்து வணங்கினர். சிலநாட்களில், லலிதாவின் உடலில் சிறிய அம்மை மாறி, பெரிய அம்மையாக உடல் எல்லாம் முத்தாய் முளைத்தது. அவள் படுத்த படுக்கையானாள். படுத்தாலும் அவளால் சொல்லப்பட்ட அருள்வாக்கு அப்படியே நடந்தது.
பலரும் அவளைப் புகழ்ந்தனர். ஆனால், ஊருக்கு நாலு பேர் வேண்டுமென்றே தெய்வநிந்தனை செய்பவர்களாக இருப்பார்களே! அந்த சிலர் லலிதாவை இகழ்ந்தனர். அவளை வேடிக்கை பொருளாக மாற்ற எத்தனித்தனர். ஆனாலும் சிறுமி தன் அருள் வாக்கினால், தன்னை நம்பி வந்தவர்களை ஆனந்தம் அடையச் செய்தாள். அத்துடன் தன்னை ஏளனமாக பேசிய ஒருவரை அழைத்து, உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அந்த கிணற்றடியில் இருக்கும் தக்காளி செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப் பறித்து என்னிடம் கொண்டு வா! என்றாள். அவர் சிரித்தபடியே என் வீட்டிலா, கிணற்றடியிலா.. தக்காளி செடியா! என்னது எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது, என்றார் அசட்டையாக...
சிறுமியோ நீ போய் பார், பழமிருக்கிறது கொண்டு வா! எனக்கு மிக பிடித்த பழம். கொண்டு வா. என்றாள். அவரும் தோட்டத்திற்கு போனார். கிணற்றடியில் இருந்த சிறிய தக்காளி செடியை பார்த்தார். அச்சிறு செடியில் பெரிய தக்காளிப்பழம். அதுவும் ஒன்றே ஒன்று இருந்தது. அப்போது தான் அவருக்கு சிறுமியின் மகிமை தெரிந்தது. நம் வீட்டு தோட்டத்தில் நமக்கே தெரியாத பழம் சிறுமிக்கு எப்படி தெரிந்தது?. பிறகே அவள் சர்வலோகமும் காக்கின்ற அன்னை, என்று உணர்ந்தார். பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து, அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். (இதனால் தான் இந்தக் கோவிலில், பக்தர்கள் அம்பாளுக்குப் பிடித்த தக்காளி பழத்தை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்). இது போல், இந்த தெய்வ சிறுமியை ஏளனமாக பேசிய மூதாட்டியிடம் லலிதா, பாட்டி! நீங்கள் சந்தைக்கு தானே போகிறீர்கள் என்று கேட்டாள். அதற்கு பாட்டி நான் கையில் கூடை வைத்திருப்பதை பார்த்து சொல்றியாக்கும் என்று சொல்ல, அதற்கு சிறுமியோ பாட்டி நீ சந்தைக்கு செல்லும் போது, வாசலின் இரண்டு பக்கங்களிலும் பனங்கிழங்கு வைத்து விற்பார்கள். அதில் இடது பக்கம் சிவப்பு சேலை, மஞ்சள் ரவிக்கை அணிந்த கருப்பு நிறமான பெண்மணி பனங்கிழங்கு வைத்திருப்பாள். அவளிடமுள்ள கிழங்குகளில் ஒன்று மிக பெரிதாக இருக்கும்.
அந்த கிழங்கை அப்பெண்மணி தனியே எடுத்து வைத்திருப்பாள். அதை வாங்கி வந்து தர்றியா எனக்கேட்டாள். சிறுமி கூறிய வார்த்தைகளை அலட்சியமாக கேட்டு சந்தைக்குள் நுழையப்போன பாட்டிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதே போல் இருபுறமும் இரண்டு பெண்கள் பனங்கிழங்கு விற்க அதில் ஒருத்தியிடம், சிறுமி சொன்னபடியே தனியாக ஒரு பனங்கிழங்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.
என்ன அதிசயம்! பனங்கிழங்குகாரியே பாட்டியை கூப்பிட்டு கூவி அழைக்க, பாட்டிக்கு உண்மை விளங்கியது. கிழங்கினை வாங்கி வந்து தெய்வ சிறுமியிடம் கொடுத்து வணங்கினாள். இப்படி தன் அருள்வாக்கால் பல அதிசயங்களை நிகழ்த்திய தெய்வச்சிறுமி பற்றிய பேச்சு எங்கும் பரவியது. தெய்வ சிறுமி ஒரு நாள் தன்னை சுற்றி இருப்போரிடம், நான் மகமாயியாக மாறி, என் ஆலயம் வரும் அனைவருக்கும் அருள் பாலிக்க போகிறேன். நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடுங்கள் என சொல்லி தற்சமயம் ஆலயம் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினாள். என்னை வழிபடுவோருக்கு நோய் நொடிகள் தீரும். மன மகிழ்ச்சி கூடும். சகல வளமும் பெருகும். கன்னியருக்கு மணமாகும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு மகப்பேறு கிடைக்கும். காளையருக்கு வேலை வரும். மொத்தமாய் சொன்னால் ஐஸ்வர்ய நலன் தேடி வந்து மகிழ்வூட்டும், என சொல்லி முக்தி அடைந்தாள். அன்று முதல் ‛லலிதாம்பிகை அன்னையை முத்துமாரி என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.
17.11.1956 துன்முகி ஆண்டு, கார்த்திகை இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்னை முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்தது. அன்னை அவதரித்த நாள் முதலே அவளின் அருள்பார்வை பட்ட அனைவருமே, இன்பமாய் வாழத்தொடங்கினர்.இறை பூமியான - மீனாட்சிபுரத்தில் முத்துமாரி அருளாட்சி செய்து வருகிறாள்.