உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில், இன்று, கந்த சஷ்டி விழா துவங்கி, வரும்,6ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா, ஏழு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா, இன்று காலை துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து, காலை, 10:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை காவடி மண்டபத்தில், உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெறும். நாளை, மூலவருக்கு பட்டு, 2ம் தேதி தங்ககவசம், 3ம் தேதி திருவாபரணம், 4ம் தேதி வெள்ளி கவசம், 5ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. 31ம் தேதி முதல், வரும் 6ம் தேதி வரை காவடி மண்டபத்தில், காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி, 6ம் தேதி நண்பகலில் உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது.

முதன்முறையாக...: அதே போல், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, இன்று துவங்கி, வரும் 5ம் தேதி வரை, மூலவருக்கு தினமும், காலை, 10:00 மணிக்கு, புஷ்பம், பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம், சந்தன காப்பு என, ஏழு நாட்களும், ஒவ்வொரு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இக்கோவிலில், முதன்முறையாக இந்தாண்டு முதல், கந்த சஷ்டி விழா தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !