உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் பிரம்ம தீர்த்த குளம் தூர்வாரப்படுமா?

திருவொற்றியூர் பிரம்ம தீர்த்த குளம் தூர்வாரப்படுமா?

திருவொற்றியூர் : திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தை துார் வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்திற்கு, தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். கோவிலுக்கு வெளியே, ஆதிஷேச தீர்த்த குளமும், கோவிலில், வடிவுடையம்மன் சன்னிதியின் வலப்பக்கம் பிரம்ம தீர்த்த குளமும் உள்ளது. வெளியில் இருக்கும் அதிஷேச குளத்தை துார் வாரி, புனரமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. எனினும், கோவில் நிர்வாகம் இது குறித்து, வாய் திறக்கவில்லை. மழை காலத்திற்கு முன், பணியை மேற்கொண்டிருந்தால், மழை நீரை குளத்தில் தேக்கியிருக்கலாம். கோவில் நிர்வாகம் முனைப்பு காட்டியதாக தெரியவில்லை. கோவிலினுள் இருக்கும், பிரம்ம தீர்த்த குளம் சிறியது தான். குளத்தில் பெரிய வகை மீன், வாத்துகள் உள்ளன. பலர் பயன்படுத்திய, பிளாஸ்டிக் கழிவுகளை குளத்தில் போடுவதால், குளம் மாசடைந்துள்ளது. குளம் துார்வாரி ஆண்டுகள் கடந்து விட்டதால், குளம் நீர் பச்சை நிறத்திற்கு மாறிவிட்டது. குளமருகே சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடிக்கின்றனர். குளத்தை துார் வார தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அனுமதி கோரியும், கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. பிரம்ம தீர்த்த குளத்தை துார் வாரும் பணியை, கோவில் நிர்வாகம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

முடங்கும் பணிகள்: திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலுக்கு தனி, உதவி ஆணையர் இல்லை. கடந்த ஜூலையில் உதவி ஆணையராக இருந்த லதா ஓய்வு பெற்ற நிலையில், துணை ஆணையர் பதவி வகிக்கும் வான்மதி, வடிவுடையம்மன் கோவில் உதவி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால், கோவில் நிர்வாக பணிகளில், சிக்கல்கள் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். எனவே, வடிவுடையம்மன் கோவிலுக்கு தனி, உதவி ஆணையர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !