விருத்தாசலம் கோவில்களில் கந்தர் சஷ்டி விழா துவக்கம்
விருத்தாசலம்: விருத்தாசலம், கம்மாபுரம் கோவில்களில் கந்தர் சஷ்டி விழா நேற்று துவங்கியது. வரும் 5ம் தேதி கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (31ம் தேதி) முதல் மகா கந்தர் சஷ்டி விழா துவங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் உள்ள சண்முக சுப்ரமணியர் சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு இரவு 7:00 மணியளவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் 5ம் தேதி கந்தர் சஷ்டி அன்று இரவு 7:30 மணியளவில் சண்முக சுப்ரமணியர் சுவாமி, விருத்தாம்பிகை அம்மனிடம் சக்தி வேல் வாங்கி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. தினசரி மாலை 4:30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. கம்மாபுரம் கம்மாபுரம் சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினசரி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிழ்வாக வரும் 5ம் தேதி காலை 9:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.