உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்மலை கோவிலில் சூரசம்ஹார விழா

பொன்மலை கோவிலில் சூரசம்ஹார விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கடந்த மாதம் 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் சூரசம்ஹார விழா துவங்கியது.  நவம்பர் முதல் தேதி மாலை திருவிளக்கு பூஜை சஷ்டி குழு சார்பில் நடந்தது. இதில், 49 பெண்கள் பங்கேற்றனர். பல்வேறு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் பூஜை நிறைவடைந்தது. விழாவில் நாளை மாலை, 5:00 மணியளவில் வேல் வாங்கும் உற்சவம் கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவிலில் துவங்குகிறது.

நவ., 5  பகல், 12:00 மணிக்கு வேலாயுதசாமி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கிறது. மாலை, 6.00 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.  இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வேலாயுதசாமி எழுந்தருள, கரிய காளியம்மனிடம் பெறப்பட்ட சக்தி வேலுடன் பொன்மலையை வேலாயுதசாமி சுற்றி வரும்போது, வேலை சூரனை நோக்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பொன்மலை வேலாயுதசாமி கோவில் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி–கோவை மெயின்ரோடு வழியாக  சிவலோகநாதர் கோவில் அருகே வரும்போது, மலையின் அக்னி மூலையில் முதல் சூரனான தாரகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். பின் மலையின் கன்னி மூலையான தேரோடும் வீதியில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், கிருஷ்ணசாமிபுரம் வீதியில் மலையின் வாயு மூலையில் மூன்றாவது சூரனான பானுகோபன் வதம் செய்யும் நிகழ்ச்சியும், நான்காவது சூரனான சூரபத்மன் மலையின் நிருதி மூலையான கோவை ரோட்டில் வதம் செய்யும் நிகழ்ச்சியும் இடம் பெறுகின்றன.

சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும், விரதமிருந்த பக்தர்களுக்கு, வாழை தண்டு, திராட்சை, மிளகாய், கேரட், வெள்ளரிக்காய், மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறி மற்றும் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.  வரும் 6ம் தேதி காலை, 9:00 முதல் 10: 30 மணிக்கு வேலாயுதசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனை தொடர்ந்து சஷ்டி குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நவ., 7 பகல், 12:00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் கந்தசாமி, சஷ்டிகுழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !