உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் நவ.,6 திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் நவ.,6 திருக்கல்யாணம்

திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நவ.,5, புஷ்பாஞ்சலியும், நவ.,6 திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழாவும் நிறைவு பெறுகிறது.

திருத்தணி முருகன் கோவிலில், நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த, 31ம் தேதி துவங்கியது. விழாவை ஒட்டி, மூலவருக்கு புஷ்பம், பட்டு, தங்க கவசம், வெள்ளி கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், தினமும் காலை, 8:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை காவடி மண்டபத்தில் சண்முக பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவின் ஆறாம் நாளான இன்று, காலை, மூலவருக்கு, சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
மாலை, 5:00 மணியளவில், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, பல்வேறு வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. அனைத்து முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடைபெறும்.

காரணம், முருகப்பெருமான் திருத்தணி மலையில் சினம் தணிந்து வள்ளியை மணந்ததால் தான் புஷ்பாஞ்சலி நடக்கிறது. நவ.,6, நண்பகலில், அதே காவடி மண்டபத்தில், உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியுடன், கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கடந்த இரவுகளில், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியம் உட்பட நடன நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !