வடகோட்டிப்பாக்கம் கோவில் கும்பாபிஷேகம்
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 5ந்தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதிஹோமம், கங்கை திரட்டல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், பிரவேச பலி, முதற்கால யாகசாலை பூஜைகள், மகாதீபராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையின் போது, கோ பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, நான்காம் கால விசேஷ மூலிகை திரவிய ஹோமங்கள், மஹாபூரணாஹூதி, மந்திர புஷ்பம் மகாதீபாராதனை நடந்தது. காலை 10.00மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலயஸ்வாமிகள் மற்றும் முருக்கேரி சீனிவாசசாமி குழுவினர், திரவுபதியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். முன்னாள் சேர்மன் விஜயாஅர்ஜூணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.