உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்டு ரத்தம் கலந்த காவு சோறு பானை ’லபக்’: அம்மன் கோவிலில் நடக்கும் வினோதம்

ஆட்டு ரத்தம் கலந்த காவு சோறு பானை ’லபக்’: அம்மன் கோவிலில் நடக்கும் வினோதம்

பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவிலில், மேல் நோக்கி வீசப்படும் காவு சோறு பானையை, மரத்தில் இருக்கும் கருப்பணார் சுவாமி பிடித்துக்கொள்வதால், பானை திரும்ப கீழ் நோக்கி வராத வினோதம் நடக்கிறது. பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தத்தில், எட்டுப்பட்டி எல்லை பிடாரி அம்மன் கோவில் உள்ளது. அங்குள்ள ஆச்சா மரத்தில், கருப்பணார் சுவாமி இருப்பதாக, மக்கள் நம்புகின்றனர். வெளியேற்றம்: திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி, அந்த மரத்தில், தொட்டில் கட்டி, பக்தர்கள் வேண்டுதல் வைக்கின்றனர். நேற்று முன்தினம், குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள், அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும், கோவில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அறிகுறி இல்லை: இரவு, புது பானை ஒன்றில், கோவில் பூசாரிகள் பொங்கல் வைத்தனர். ஆட்டு கிடா ஒன்றை வெட்டி, அதன் ரத்தத்தை பொங்கல் சோற்றில் கலந்து, காவு சோறு தயார் செய்தனர். இரவு, 8:00 மணிக்கு, பூசாரி, ஆச்சா மரம் முன் நின்று, காவு சோறு பானையை, மர உச்சியை நோக்கி வீசிவிட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை பார்த்தபோது, மரம் மீது வீசப்பட்ட காவு சோறு பானை, கீழே வந்து விழுந்ததற்கான அறிகுறி இல்லை. மரத்தில் இருக்கும் கருப்பணார், காவு சோறை பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

5 தலைமுறையாக...: பூசாரிகள் கூறியதாவது: ஆச்சா மரத்தில் உள்ள கருப்பணார், சக்தி வாய்ந்தவர். ஆண்டுதோறும் திருவிழா நடந்த இரவு, ஆச்சா மரத்தில் உள்ள கருப்பணாருக்கு, காவு சோறு போடப்படும். அந்த சோறு பானையை, மரத்தில் இருக்கும் கருப்பணார் பிடித்துக்கொள்வார். அதனால், பானை கீழ் நோக்கி வருவது இல்லை. இந்த வழக்கம், ஐந்து தலைமுறையாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !