நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: தாமனேரி கிராம குளக்கரையில் உள்ள நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, தாமனேரி கிராமத்தின் கிழக்கே உள்ள குளக்கரையில், நாகாலம்மன் கோவில் உள்ளது. மரத்தடியில் இருந்த கோவிலை, புதுப்பிக்கும் பணி, ஓராண்டாக நடந்து வந்தது. இந்த கோவிலின், தென் மேற்கு திசையில், புற்றில் காமதேனு பால் சுரப்பது போன்ற சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது சிறப்பு. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் பரத நாட்டியம் கலை நிகழ்ச்சி நடந்தது. இதே போல், பாலாபுரம் கிராமத்தின் கிழக்கே, குளக்கரையில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நேற்று நடந்தது.