உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமபாளையம் நரசிங்க பெருமாள்கோயில் திருப்பணியில் இழுபறி

உத்தமபாளையம் நரசிங்க பெருமாள்கோயில் திருப்பணியில் இழுபறி

உத்தமபாளையம்;உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணிகள் முடிவடைந்தும், கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை இழுபறியால் காலதாமதம் ஆகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தென் மாவட்டங்களில் நரசிங்க பெருமாள் கோயில் உத்தமபாளையம் மற்றும் மதுரை ஒத்தக்கடையில் உள்ளது. கம்சனை வதம் செய்த நரசிங்க அவதாரம் கோபம் தணியாமல் அமர்ந்திருக்கும் நிலையில் இக் கோயிலில் உள்ளது. சுமார் 800 ஆண்டு பழமையான இந்த கோயிலை புனரமைக்க இங்குள்ள ஓம் நமோ நாராயணா பக்தசபை ஏற்பாடு செய்தது.

அறநிலையத்துறை இழுபறி: கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் 30 லட்ச ரூபாயில் பிரதான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வடக்கு பக்கம் ஆண்டாள் சன்னதி ரூ. 15 லட்சத்தில் பழனிவேல்ராஜன், லட்சுமி சன்னதி உள்பட திருப்பணிகள் நடந்து வருகிறது. அதேபோல பல உபயதார்கள் பல திருப்பணிகளை செய்ய முன்வந்துள்ளனர். மடப்பள்ளி கட்டுவதற்கும், கருடவாகனம், பாம்பு வாகனம் போன்ற வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டுவதற்கும் அனுமதி தருவதில் இந்து சமய அறநிலையத்துறையினர் இழுத்தடித்து வருகின்றனர்.

காலதாமதம்: மடப்பள்ளி கட்டாவிட்டால் திருப்பணி வேலைகள் நிறைவடையாது என்று ஆன்மிக மெய்யன்பர்கள் கருதுகின்றனர். சம்பந்தப்பட்ட இந்த சமய அறநிலையத்துறையினர் அனுமதி தருவதில் காலதாமதம் செய்கின்றனர். ஆண்டவன் சன்னதியில் திருப்பணி செய்வதற்கு பக்தர்கள் தயாராக வந்தபோதும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஐந்து ஆண்டுகளாக நரசிங்க பெருமாள் கோயிலை பூட்டி வைத்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் இக் கோயில் திருப்பணியில் கவனம் செலுத்தி, திருப்பணி தாமதமின்றி நடைபெற அனுமதியை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !