யாகத்திற்கு தயாராகும் மூலிகை குச்சிகள்
ஆர்.கே.பேட்டை: யாகம் வளர்ப்பதற்கான மூலிகை குச்சிகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.திருமணம், புதுமனை புகுவிழா மற்றும் பூஜைகளில், அக்னி மூட்டி, யாகம் நடத்துவது வழக்கம். இந்த யாகத்தில் எரிப்பதற்காக, அரச மரம், நாயுருவி, அத்தி, ஆலம் உள்ளிட்ட, ஒன்பது வகையான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குச்சிகள் அடங்கிய பொட்டலம் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் இயற்கையாக கிடைக்கும் இந்த குச்சிகளை சேகரித்து, பக்குவமாக வெட்டி, பேக் செய்து விற்பனைக்கு அனுப்புவதில், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு, இவற்றை தேடி சேகரிக்க நேரமும், பொறுமையும் இருப்பதில்லை. இவர்களின் அவசர தேவையை ஈடுசெய்யும் விதமாக, விவசாயிகள் இந்த மூலிகை குச்சிகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவிதமான முதலீடும் இல்லாமல், நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர்.