உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் அன்னை காவிரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்!

மயிலாடுதுறையில் அன்னை காவிரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்!

மயிலாடுதுறை: தமிழக அரசு நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தால் தான் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று சுவாமி ராமானந்தா வலியுறுத்தியுள்ளார். குடகு மலையில் தொடங்கி, பூம்புகார் வரை உப நதிகளுடன் டெல்டா மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் காவிரியின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்க வலியுறுத்தி அகில இந்திய துறவியர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து விழிப்புணர்வு ரத யாத்திரையை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் 6ம் ஆண்டாக கடந்த அக்டேபர் 3ம் தேதி குடகு மலையில் தொடங்கி இன்று 13ம் தேதி பூம்புகாரில் யாத்திரை முடிவடைகிறது.நேற்று மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த ரதயாத்திரை குழுவினருக்கு காவிரி பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் முத்துகுமாரசாமி, பூஜாரிகள் பேரமைப்பு, ஹிந்து கலாச்சார சமிதி இணைந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் அன்னை காவிரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி,வழிபாடு நடந்தது. அகில இந்திய துறவியர்கள் சங்க செயலாளர் சுவாமி ராமானந்தா அருளாசி வழங்கி பேசுகையில் நீர் இன்றி அமையாது உலகு. தமிழக அரசு நீர்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்கவேண்டும் அப்போதுதான் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கி டைக்கும்.நீர்வளம் குன்றினால் மக்கள் ஆரோக்கியம் குற்றிபோகும்.மனித சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அனைத்தையும் கடவுளாக வழிபடக்கூடியவர்கள் இந்தியர்கள்தான். நமது களாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதோடு இயற்கையை நேசிக்க வேண்டும். காவிரியின் தூய்மையை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கர்நாடகா நாகேஸ்வரானந்தா, சர்வேஸ்வரானந்தா, திருவையாறு பழஅடியார் சுவாமிகள், கோவை யுத்தேஸ்வரானந்தா, மாதாஜி ஓம்சக்தி அம்மா, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், ஏடி எஸ் நிறுவனங்களில் உரிமையாளர் தமிழ்செல்வன், சமுக ஆர்வளர் அப்பர்சுந்தரம், அழகிரிசாமி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !