உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் நவராத்திரி விழா: அம்பு எய்து அரக்கனை வதம் செய்த அம்மன்!

சதுரகிரி மலையில் நவராத்திரி விழா: அம்பு எய்து அரக்கனை வதம் செய்த அம்மன்!

வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் நடந்த நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளில், அரக்கனை, அம்மன் வதம் செய்யும் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சதுரகிரி மலையில் எழுந்தருளியுள்ள ஒரே பெண் தெய்வமான ஆனந்தவல்லி அம்மனுக்கு, 9 நாட்கள் நடைபெறும் நவராத்தகரி விழா சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவின் போது மட்டும், அம்மன் கோயிலில் உருவமாய் எழுந்தருளி காட்சியளிப்பார். மற்ற நாட்களில் பீட வழிபாடு மட்டுமே உண்டு. அம்மனை உருவ வடிவில் காண வேண்டி, விழா நாட்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவர். இவ்விழா செப்., 27ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இறுதி நாளான நேற்று மலையில், அரக்கனை, அம்மன் அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலையில் அம்மன் மகிசாஷ்வர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடந்தது. மதியம் பெண்களின் முளைப்பாரி பூஜையும், கும்மி வழிபாடும் நடந்தது. பின்னர் அரக்கனை அழிக்க அம்மன், கோயிலை விட்டு வெளியேறி, ஊர்வலமாக கோயில் எல்லை வரை சென்றார். அங்கு அரக்கன் அழிக்கப்பட்டவுடன், பக்தர்கள் கைதட்டி, குலவையிட்டு ஆரவாரம் செய்து வழிபட்டனர். பின், அம்மன் கோயிலை சென்றடைந்தார். அரக்கன் அழிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, அம்மனுக்கு படையல் விருந்தும், காளிமுத்து மகரிஷி ஆஸ்ரமத்தில் பக்தர்களுக்கு விருந்தும் நடந்தது. ரத்தவெள்ளத்தில் கோயில் வளாகம் : விழா முடிவில், பலாவடி கருப்பசாமி கோயில் வளாகத்தில், ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு கறி விருந்து நடைபெற்றது. இதற்காக கோயிலை சுற்றிலும் ஏராளமான ஆடுகள் வெட்டப்பட்டன. இதனால், கோயில் வளாகம் முழுவதும் ரத்தக்காடாக இருந்தது. இறைச்சி கழிவுகளை ஆற்றுநீரிலும், குழாயடியிலும் வைத்து கழுவியதால், அப்பகுதி சுகாதாரக்கேடான நிலையில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !