ஈரோடு சிவாலயங்களில் அன்னாபிஷேகம்
ADDED :3295 days ago
ஈரோடு: ஈரோடு சிவாலயங்களில், அன்னாபிஷேக விழா, நேற்று பக்தி பரவசத்துடன், நடந்தது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நட்சத்திரத்தில், ஒவ்வொரு பொருட்களை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். ஐப்பசியில் வரும் அஸ்வதி நட்சத்திரத்தில் பவுர்ணமியும், சேர்ந்து வருவதால், அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. உயிரினங்கள் பசி, பிணியின்றி வாழ வேண்டும் என்ற அடிப்படையில், உணவை படைத்த இறைவனுக்கே உணவை படைத்து, இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், சென்னிமலை கைலாசநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபி?ஷக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, ஈரோடு மகிமாளீஸ் வரருக்கு, 150 கிலோ அன்னத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.