வெள்ளை விநாயகர் கோவிலில் ரூ. 1.95 லட்சம் காணிக்கை
ADDED :3273 days ago
ஆத்தூர்: ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில், நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில், 1.95 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நேற்று உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் சாந்தி ஆகியோர் முன்னிலையில், 16 பேர் கொண்ட குழுவினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் நான்கு உண்டியல்களில், ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 792 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.