திறக்கப்படாத பெருமாள் கோயில் பாழடைந்து கிடக்கும் அவலம்!
கள்ளிக்குடி: கள்ளிக்குடியில் 20 ஆண்டுகள் திறக்கப்படாமல் பழமையான பெருமாள் கோயில் பாழடைந்து உள்ளது. இங்குள்ள குலசேகரத்தாழ்வார் கோயிலில் அமர்ந்திருக்கும் கோலத்தில் பெருமாள் காட்சித்தருவது சிறப்பு. இங்குள்ள சுவர்களில் பிராமி எழுத்துகள் உள்ளன. பெரும்பாலும் சிவத்தலங்களில் மட்டுமே இருக்கும் பெரிய ருத்ராட்ச மரம் இங்குள்ளது. கோயிலுக்கு சொந்தமான 157 ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதை மீட்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இக்கோயிலில் 18 வகை மலர்கள் கொண்ட நந்தவனம் பராமரிக்கப்பட்டது. தற்போது அதற்கான தடயமே இல்லை. கோயில் கிணறும் சிதைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கும் இக்கோயில், அறநிலையத்துறை கட்டுபாட்டிற்கு வந்தும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்ட 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி பாதியிலேயே விடப்பட்டது. விரைவில் கோயிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.