உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

தேனி: தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியில் களிமண் மூலம் கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.தேனி அருகே பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், 48. இவர் பல ஆண்டாக களிமண் மூலம் கார்த்திகை விளக்குகள் (கிளியாஞ்சட்டி) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுமட்டுமின்றி பொங்கல் கலயம், ஆயிரங்கண் பானை, அடுப்புகள், உண்டியல், பூச்சாடிகள், அக்னி சட்டிகள் மற்றும் நேர்த்திகடனாக செலுத்தும் பொம்மைகள் உள்ளிட்டவற்றையும் தயாரிக்கிறார்.  மாணிக்கம் கூறியதாவது: இந்த ஊரில் பல தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். தாத்தாவுக்குப்பின் தந்தை குருசாமி இத்தொழில் செய்தார். அவருக்கு பிறகு நான் ஈடுபட்டுள்ளேன். ஆண்டுதோறும் வேலை இருந்தாலும், சீசனுக்கு ஏற்றாற்போல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இத்தொழிலை நம்பியே குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

ஆயிரங்கண் பானை:வீரபாண்டி திருவிழா நேரத்தில் நான்கு மாத்திற்கு முன்பாகவே அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை, நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்களின் நலன் கருதி சிறிய கால் மற்றும் கை போன்ற தோற்றமுடைய செயற்கை கால்கள் போன்றவை தயாரிக்கும் பணியில் கவனம் செலுத்துவேன். தற்போது, கார்த்திகை மாதத்தையொட்டி கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளேன். விளக்கு செய்வதற்கு தேவையான களிமண் சுற்றுவட்டார கண்மாய்களில் இருந்து சேரித்து மொத்தமாக வைத்துக்கொள்வேன். பின் அம்மண்ணை நன்றாக குலைத்து, பக்குவத்திற்கு வந்தவுடன் சுழலும் சக்கரத்தின் நடுவே திரட்டி வைத்து சக்கரம் சுழல கையால் கார்த்திகை விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன். நாளொன்றுக்கு ஆயிரம் விளக்குகள் வீதம் தயாரிப்பேன். ஈரத்தன்மையுள்ள விளக்குகள் வெயில் மற்றும் அடுப்பால் சூடு படுத்தப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

கேரளா பயணம்:  தேனி மட்டுமின்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் இங்கு வந்து கார்த்திகை விளக்குகள் உட்பட பல பொருட்களை வாங்கிச் செல்வர். ஒரு விளக்கு ரூ.1க்கு விற்கிறேன். விறகு எரிக்க பயன்படும் மண் அடுப்பு ரூ. 40க்கும், இரட்டை அடுப்பு ரூ.80க்கும், குழாய் அடுப்பு ரூ.120க்கும் விற்கிறேன். மனைவி போதுமணி உதவியாக இருந்து வருகிறார்,”என்றார். போதுமணி கூறுகையில்,“ தயாரிக்கும் விளக்குகள் மற்றும் பொருட்களை தினமும் வெயிலில் உலர வைத்து, பின் பக்குவமாக அதை எடுத்து வீட்டிற்குள் அடுக்கி வைப்பேன். கைத் தொழில் இருந்தால் யாரையும் நம்பி பிழைக்க அவசியமில்லை,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !