மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3283 days ago
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று நடந்த பாலாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை ராகுகால பூஜை நடந்தது. நேற்று காலை முதல், மாலை வரை திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.