உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி நூதன வழிபாடு கிராமத்திலிருந்து வெளியேற முடிவு

மழை வேண்டி நூதன வழிபாடு கிராமத்திலிருந்து வெளியேற முடிவு

உடுமலை: உடுமலை அருகே மழைவேண்டி, கிராம மக்கள் வீடு வீடாக சென்று மழைச்சோறு வங்கி வந்து நுாதன முறையில் விநாயகரை வழிபட்டனர். உடுமலை அருகே அமைந்துள்ளது பெரியவாளவாடி கிராமம். விவசாயமும், அதனை சார்ந்த தொழிலுமே பிரதானமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். கிணற்று பாசனத்தை பயன்படுத்த சாகுபடி செய்த பயிர்களும் போதிய தண்ணீர் கிடைக்காமல் காய்ந்து வருகின்றனர். இந்நிலையில் பெரியவாளவாடி கிராம மக்கள் நுாதன முறையில் மழைவேண்டி ஊரிலுள்ள விநாயகர் சிலையை சாணத்தில் முழுவதும் மறைத்து வழிபட்டனர். தொடர்ந்து கிராமத்து பெண்கள் ஒவ்வொரு வீடாக சென்று மழைச்சோறு வாங்கி வந்து விநாயகருக்கு படையல் வைத்தனர். அனைவருக்கும் அதனை பிரசாதமாக வழங்கினர். பின்னர் பெண்கள் இந்த ஊரில் மழையில்லை அதனால் ஊரைவிட்டு செல்வோம் என்று வெளியேறுவதும்; அவர்களை ஆண்கள் மூன்று நாட்களில் மழை வந்துவிடும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்து சென்றனர். இவ்வாறு விநாயகரை சாணத்தில் மறைத்து; இதுபோன்று வழிபட்டால் மழைவரும் என்பது ஐதீகம் என்றும்; மழைபொய்த்த நாட்களில் முன்னோர்கள் இவ்வாறான வழிபாடே செய்தனர் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; காலங்காலமாக இதுபோன்ற பல்வேறு ஐதீகங்கள் வழக்கத்தில் இருந்து வருகிறது. மழை பெய்ய வேண்டி ஊரிலுள்ள சாமியை சாணத்தால் மறைத்து; மழைச்சோறு வாங்கி வந்தால் மழைவரும் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இவ்வழிப்பாட்டை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும். மூன்று நாட்கள் வழிபாடு நடக்கும். என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !