உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை புனித மிக்கேல் பேராலயம் இன்று அர்ச்சிப்பு

கோவை புனித மிக்கேல் பேராலயம் இன்று அர்ச்சிப்பு

கோவை : கோவை மறை மாவட்டத்திலுள்ள, 89 கத்தோலிக்க தேவாலயங்களின் தாய்க்கோவிலாக கருதப்படும் புனித மிக்கேல் பேராலயத்தின் அபிஷேக விழா, இன்று நடக்கவுள்ளது. கோவை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 89 கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளன. மறை மாவட்டத்தின் பேராலயமான புனித மிக்கேல் தேவாலயம், கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, கருமத்தம்பட்டி தேவாலயமே, மறை மாவட்ட தலைமைக்கோவிலாக இருந்து வந்தது. கோவைக்கு தலைமையிடம் மாற்றப்பட்ட பின்பு, பெரிய கடை வீதியில், 1867 ல், புனித மிக்கேல் தேவாலயம் கட்டப்பட்டு, மறைமாவட்ட பேராலயமாக (கதீட்ரல்) திருநிலைப்படுத்தப்பட்டது. பேராலய கட்டடம், மிகவும் பழமை ஆகி விட்டதாலும், இடப்பற்றாக்குறை காரணமாகவும், புதிய தேவாலயம் கட்டுவதற்கு மறைமாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, பழைய தேவாலயம், கடந்த 2013ல் இடிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, பேராலய கட்டுமானப் பணி நடந்து வந்தது. எல்லோரையும் ஈர்க்கும் வகையில் எழில்மிகு பிரமாண்ட தேவாலயத்தின் அபிஷேக விழா, இன்று துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளது. இந்த பெருவிழாவை முன்னிட்டு, கடந்த டிச.,3 மாலை 6:00 மணிக்கு திருப்பலியுடன் துவங்கிய திவ்ய நற்கருணை ஆராதனை, தொடர்ந்து நடந்து வந்தது. டிச., 6, 7 மற்றும் 8 ஆகிய மூன்று நாட்களும், திருச்சி விவிலியப்பணிக்குழு செயலர் ஆல்பர்ட் தலைமையில், சிறப்பு மறையுரையுடன் திருப்பலி நடந்தது. நேற்று, புனித அமல அன்னை பெருவிழா நிகழ்ச்சிகள் நடந்தன. பெருவிழாவின் முக்கிய நாளான இன்று, மாலை 4:30 மணிக்கு, துாய மிக்கேல் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் இருந்து, பவனி துவங்குகிறது.

மாலை 5:00 மணிக்கு, பேராலய முகப்பு வாயில் வளைவு, கொடிக்கம்பம் புனிதப்படுத்தும் நிகழ்வுடன், கொடியேற்றமும் நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினம் உயர் மறை மாவட்ட பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு தலைமையில், இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாலை 5:30 மணிக்கு, பேராலய அர்ச்சிப்பு நிகழவுள்ளது. இதற்கு, உயர் மறை மாவட்ட பேராயர்கள் ஜார்ஜ் அந்தோணிசாமி (சென்னை மயிலை), அந்தோணி பாப்புசாமி (மதுரை), அந்தோணி அனந்தராயர் (புதுச்சேரி-கடலுார்) ஆகியோர், தலைமை வகிக்கின்றனர். கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் பல ஆயர்கள், முன்னிலை வகிக்கின்றனர். நாளை காலை 10:30 மணிக்கு, புதுநன்மை, உறுதி பூசுதல் போன்ற அருட்சாதனக் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.பேராலய அபிஷேக விழா சிறப்பு அஞ்சல் உறை மற்றும் தபால் தலை, பேராலய அபிஷேக விழா நினைவு மலர், ஆகியவை இந்த விழாவில் வெளியிடப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. டிச., 11 ஞாயிற்றுக்கிழமையன்று, பேராலய பங்கு தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவை ஆயர் தலைமையில் கூட்டுப்பாடற்திருப்பலி நிறைவேற்றப்படும். மாலை 5:30 மணி திருப்பலிக்குப் பின், தேர்பவனி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !