கடினமானதையும் சாதிக்கலாம்!
ஏதாவது, ஒரு கடினமான செயலைத் தொடங்கும் போது, இது முடியுமோ, முடியாதோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை. ஆனால், ஆண்டவரை நம்புபவர்கள், அவர் மீது பாரத்தைப் போட்டு விட்டு, தங்கள் செய்கையைத் தொடங்குவார்கள். நடத்த முடியாத செயல்களைக் கூட நடத்திக் காட்டி விடுவார்கள். தேவனின் அன்பைப் பெற்ற இஸ்ரேல் மக்களுக்கு, ஒரு சமயம் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எதிரிகளுக்கு பயந்து வாழ்கிற சூழ்நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் இருந்தனர். ஒரு பக்கம் தேவனின் ஆசிர்வாதம், தேசத்தில் செழிப்பு என இருந்தாலும், மற்றொரு பக்கம் அந்த செழிப்பு எதிரிகளால் அழிக்கப்பட்டது. உழைப்பின் பலனை அனுபவிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். ‘யார் நமக்கு உதவி செய்வார்கள்?’ என்று கலங்கிய சமயத்தில் தான், கிதியோன் என்பவரை கர்த்தர் சந்தித்தார். ‘தேவ ஜனத்தை சத்துருக்களின் (எதிரிகள்) வல்லமையில் இருந்து விடுவித்து, ஆசிர்வதிப்பதற்காக உன்னை அனுப்புவேன்’ என்றார். ‘நான் எப்படி இந்த சத்ருக்களை மேற்கொள்ள முடியும் (சமாளிக்க முடியும்)’ என அவர் கலங்கிய போது, ‘நான் உன்னோட கூட இருப்பேன்’ என்றார் கர்த்தர். அதன்படியே, அவனுடன் இருந்து வெற்றி பெற்றுத் தந்தார். ஒரு கடினமான செயல், ஆண்டவரின் கிருபையால் சாத்தியமாயிற்று. அன்று கிதியோனுக்கு வாக்கு கொடுத்து நிறைவேற்றித் தந்த கர்த்தரிடம், நீங்கள் செய்து வரும் பணிகள், குடும்ப பிரச்னைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒப்படைத்து விடுங்கள். அவர் உங்களோடு இருந்து வெற்றியையும், ஆசிர்வாதத்தையும் அளித்து மகிழச் செய்வார்.