மகரவிளக்குக்கு பின்னர் சபரிமலையில் 16 முதல் 19 வரை படிபூஜை
சபரிமலை: மகரவிளக்குக்கு பின்னர் சபரிமலையில் ஜன., 16முதல் 19 வரை படிபூஜை நடைபெறும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் மிக முக்கியமானதும், அதிக செலவும் கொண்டது படிபூஜை. 18 மலை தேவதைகளை 18 படிகளிலும் குடியிருத்தி இந்த படிகள் கட்டப்பட்டுள்ளதாக ஐதீகம். இந்த மலை தேவதைகளை திருப்தி படுத்தும் வகையில் படிபூஜை நடத்தப்படுகிறது. 18 படிகளையும் பூக்களால் அலங்கரித்து, எல்லா படிகளிலும் பட்டு விரித்து அதில் விளக்கு தேங்காய் வைத்து இந்த பூஜை நடைபெறும். தேவசம்போர்டு இந்த ஆண்டு முதல் இதற்கு கட்டணமாக 75 ஆயிரம் ரூபாய் நிர்ணியித்துள்ளது. இது சபரிமலையிலயே அதிக கட்டணம் கொண்ட வழிபாடாகும். இதற்கான முன்பதிவு 2034-ம் ஆண்டு வரை நிறைவு பெற்று விட்டது. மண்டல மகரவிளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் கூட்டம் வருவதால் இந்த கால அளவில் படிபூஜை கிடையாது. ஆனால் மகரவிளக்கு முடிந்த பின்னர் படிபூஜை நடைபெறும். 2017 ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு தினமாகும். அதற்கு அடுத்த நாள் படிபூஜை கிடையாது. 16 முதல் 19 வரை தினமும் மாலையில் தீபாரதனைக்கு பின்னர் இரவு ஏழு மணிக்கு படிபூஜை தொடங்கி நடைபெறும். படிபூஜை பதிவு செய்தவர்களுக்காக பத்து பேருக்கு சபரிமலையில் அன்றைய தினம் சிறப்பு தரிசன வசதி ஏற்படுத்தப்படும்.