மார்கழி வைபவம் : சென்னை வீதிகளில் பஜனை
சென்னை: மார்கழி முதல் நாளை முன்னிட்டு, நேற்று, சென்னை புறநகரில், பஜனை கோஷ்டியினர், திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சியை பாடிய படி, வலம் வந்தனர். மார்கழியை, தேவர் மாதம் என குறிப்பிடுவர். இந்த மாதத்தை, இறைவழிபாட்டிற்கு ஒதுக்குவதால், எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. விரத காலத்தில் வைணவர்கள், வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி, அதன் முடிவில் சங்கு ஊதி, கோவில்களுக்கு செல்வர். வைணவ கோவில்களில், இம்மாதம் முழுவதும், திருப்பாவை பாடுவர். திருப்பாவை, 30 பாடல்களையும், திருவெம்பாவை, 20 பாடல்களையும் கொண்டது. திருவெம்பாவையுடன், திருப்பள்ளி எழுச்சியில் உள்ள, 10 பாடல்களை சேர்த்து பாடுவர். இந்த மாதத்தில், திருப்பதி திருமலையில், சுப்ரபாதத்திற்கு பதிலாக, ஆண்டாளின் திருப்பாவை பாடுவர். கன்னிப் பெண்கள், பாவை நோன்பு இருப்பர். மார்கழி முதல் நாளான, நேற்று, சென்னை, புறநகர் முழுவதும், பஜனை கோஷ்டியினர், பக்க வாத்தியங்களுடன், திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி வந்தனர். வைணவ ஷேத்திரங்களில், திருப்பாவை பாடப்பட்டது. இதில், சிறார் முதல், மூத்த குடிமகன்கள் வரை, வயது வித்தியாசமின்றி பங்கேற்றனர். இந்த நிகழ்வு, ஒரு மாதத்திற்கு தொடரும்.