உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் கோவில் உலக நன்மை வேண்டி அதிருத்ர மகா யாகம்!

நடராஜர் கோவில் உலக நன்மை வேண்டி அதிருத்ர மகா யாகம்!

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு நேற்று மகா அபிஷேகம் நடந்ததையொட்டி உலக நன்மை வேண்டி அதிருத்ர மகா யாகம் மற்றும் வேள்வி நடத்தப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன காலங்களில் ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சபைக்கு எதிரில் கனகசபையில் நான்கு முறையும் நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி பொது தீட்சிதர்கள் சார்பில் உலக நன்மை வேண்டி கோவில் நடன பந்தலில் நேற்று அதிகாலை முதல் அதிருத்ர மகா யாகம் நடந்தது. தொடர்ந்து 2 மணியில் இருந்து ருத்ர வேள்வி நடந்தது. மகா அபிஷேகத்தையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருளச் செய்யப்பட்டு காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை நடந்தது. அதனைத் தொடர்ந்து யாக சாலையில் கலச பூஜை, சிறப்பு அர்ச்சனை, ஜப பூர்த்தி முடிந்து மாலை மகா அபிஷேகம் நடந்தது. குடம், குடமாக பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !