13ம் நூற்றாண்டு கல்வெட்டு: வரலாற்று தேடல் குழு கண்டுபிடிப்பு
ஓசூர்: ஓசூர் அடுத்த பாரந்தூர் கிராமத்தில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால நடுகல் மற்றும் கல்வெட்டை, வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்தனர். ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாரந்தூர் கிராமத்தில், வரலாற்று தேடல் குழுவை சேர்ந்த, அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 13ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர்கால நடுகல் மற்றும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, அறம் கிருஷ்ணன் கூறியதாவது: பாரந்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட நடுகல், ஒரு ஊரை மீட்பதற்கு நடந்த சண்டையில் இறந்து போன போர் வீரனின் நினைவாக வைக்கப்பட்டது. பாரந்தூர் கிராமத்தில் உள்ள வெங்கடேசப்பா என்பவரது விவசாய நிலத்தில், சிறு கோவில் போல் கட்டப்பட்டு, இந்த நடுகல்லையும், கல்வெட்டையும் பாதுகாத்து வந்துள்ளனர். இதே இடத்தில் வேறுசில நடுகற்களும் உள்ளன. அதில், பாம்பு கடித்து இறந்து போனவர்களின் நடுகல்லும், போரில் இறந்து போன வீரனின் நடுகல்லும் குறிப்பிடத்தக்கவை. இந்த நடுகல் மற்றும் கல்வெட்டு, 13ம் நூற்றாண்டை சேர்ந்தவை. நடுகல்லில், மூன்று குதிரை வீரர்களால் போர் வீரன் சூழப்பட்டதை போலவும், வலது புரத்தில் உள்ள குதிரை வீரன், போர்வாள் கொண்டு வீரனை தாக்க வருவதை போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாவது குதிரை வீரன், இடது புறத்தில் இருந்து, நீளமான வேல் கொண்டு தாக்க வருவதும், இரண்டு குதிரை வீரர்களுடனும், இரு கரங்கள் கொண்டு மூர்க்கதனமாக போர்வீரன் சண்டையிடுவதை போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஒரு குதிரை வீரன், போர்வீரனின் முதுகின் பின்புறத்தில் இருந்து தாக்குவது போலவும், நடுகல்லில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கல்வெட்டில் மொத்தம் பத்து வரிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.