ஆண்டவரைக் காணும் நேரம்!
பிரான்சிஸ் அசிசி என்ற துறவியைத் தேடி மூன்று பேர் வந்தனர். அவரிடம், “துறவியாரே! நாங்கள் ஒரு மலையிலுள்ள குகைகளில் தனித்தனியாக வசிக்கிறோம். ஆண்டவரைக் காண வேண்டுமென்பது எங்கள் ஆசை. அதற்காக கடும் பிரயத்தனம் செய்கிறோம், ஜெபிக்கிறோம். நாங்கள் அவரைக் காண முடியவில்லை. தாங்கள்தான் ஆலோசனை கூற வேண்டும், என்றனர். அவர்களைப் பார்த்து சிரித்த துறவி, “இருப்பதே மூவர்! நீங்களே பிரிந்திருந்தால் ஆண்டவரை எப்படிக் காண முடியும்? நீங்கள் மூவரும் இனி ஒரே குகையில் தங்குங்கள். உங்களில் ஒருவரைத் தந்தையாகவும், ஒருவரைத் தாயாகவும், ஒருவரைக் குழந்தையாகவும் பாவித்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து தந்தையாக இருந்தவர் தாயாகவும், தாயாக இருந்தவர் தந்தையாகவும் மாறிக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தையாக இருந்தவர் தாய், தந்தையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோருமே, மூன்று உறவுகளாக மாறி மாறி நடந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் எப்போது ஒற்றுமையும், அன்பும் அதிகமாகிறதோ அப்போது ஆண்டவர் உங்களுக்குத் தெரிவார், என்றார். அன்பிலும், ஒற்றுமையிலும் மட்டுமே ஆண்டவர் வாழ்கிறார் என்பதை அந்த இளைஞர்களுக்கு எளிதாகப் புரிய வைத்தார் பிரான்சிஸ் அசிசி. உலகில் பிறந்த அனைவரும் தங்களை உறவுகளாக, நட்பாக பார்க்கும் காலம் எப்போது வருகிறதோ, அப்போது தான் ஆண்டவரைக் காண முடியும்.