ஸ்ரீவி.,கோயிலில் பகல்பத்து உற்சவம் : பிறந்த வீட்டில் எழுந்தருளிய ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் பச்சை பரத்தல் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. பிறந்த வீடான வேதபிரான் திருமாளிகைக்கு ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளினார். நேற்று மாலை 4:35 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை ஆடிப்பூர பந்தலில் வேதபிரான் பட்டர் வரவேற்றார். அவருக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். பிறந்த வீடான வேதபிரான் திருமாளிகைக்கு எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு மணி பருப்பு , திரட்டுப்பால் நைவேத்யம் படைத்தனர்.
கோஷ்டி அருளிப்பாடு: அங்கு கட்டளைப்பட்டி கிராம மக்கள் கொண்டு வந்த பச்சைக் காய்கறிகளை பார்வையிட்டு, கீழமாடவீதி, ராஜகோபுரம் வழியாக திருவோண மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். அப்போது ஆண்டாளுக்கு பிறந்த வீட்டு சீதனமாக காய்கறிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து திருப்பல்லாண்டு துவங்கியது.தொடர்ந்து பகல்பத்து மண்டபத்தில் திருவாரதனம், கோஷ்டி அருளிப்பாடு நடந்தது. நள்ளிரவில் மூலஸ்தானம் வந்தடைந்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா,வேதபிரான் அனந்தராமகிருஷ்ணர், சுதர்சனன், அரையர் முகுந்தன், ஸ்தானிகம் ரமேஷ் பங்கேற்றனர்.
பச்சை பரத்தல்பார்க்க வந்த கிளி : வேதபிரான் திருமாளிகையில் சிறப்பு பூஜைகள் நடக்கும்போது, பந்தலுக்கு மேல் கிளி ஒன்று அங்கிருந்த மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. தீபராதனை முடிந்தவுடன் கிளி பறந்து சென்றது. இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.