உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்றாக இருக்க வேண்டும் 2017 சிறப்பு பிரார்த்தனையுடன் துவக்கம்

நன்றாக இருக்க வேண்டும் 2017 சிறப்பு பிரார்த்தனையுடன் துவக்கம்

ஊட்டி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், 12:00 மணிவரை, சிறப்பு நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியுடன், புத்தாண்டு துவக்கப்பட்டது. ஊட்டி புனித மோட்ச ராக்கினி தேவாலயத்தில், பங்கு குருக்கள் தலைமையில் நடந்த திருப்பலிக்கு பின், ஊட்டி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் பங்கேற்று, மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார். பின், பிஷப் இல்லம் அருகில் புதுப்பிக்கப்பட்ட மாதா கெபி, ஆரோக்கிய அன்னையின் உருவச் சிலையை மந்திரித்து அர்ப்பணித்தார்.

ஊட்டி குருசடி, இருதய ஆண்டவர், பிங்கர்போஸ்ட் திரேசன்னை, பாய்ஸ்கம்பெனி ஆரோக்கிய அன்னை தேவாலயங்கள், குன்னுார் புனித அந்தோணியார், பேரக்ஸ் புனித ஜோசப், கோத்தகிரி ஆரோக்கிய அன்னை தேவாலயங்கள் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. நேற்று காலை, ஊட்டி மாரியம்மன் கோவில், காந்தள் காசி விஸ்வநாதர் கோவில், ஐயப்பன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பூஜைகள் நடத்தப்பட்டன. ஆன்மிக நினைவுகளோடு, ஒரு தரப்பு மக்கள் புத்தாண்டை வரவேற்ற நிலையில், ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல், காட்டேஜ், லாட்ஜ்களில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் உற்சாகமாயினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா உத்தரவில், மாவட்டம் முழுக்க, சி.சி.டி.வி., கேமரா உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !