உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் புனரமைப்பு

1,000 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் புனரமைப்பு

ஆர்.கே.பேட்டை: ஈசனை பாடியதால்,ஈச்சம்பாடி என்ற பெயர் காரணம் கொண்ட, ஆன்மிக சிறப்பு வாய்ந்த கிராமத்தில், 1,000 ஆண்டுகளாக சீரழிந்து கிடந்த பெருமாள் கோவிலை, அந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்களால் அடையாளம் காணப்பட்டு, கோ வில் புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. கட்டட அமைப்பு மாறாமல் புதுப்பிக்கும் பணியில், சிற்பக்கலை வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்டது, ஈச்சம்பாடி கிராமம். ஈசனை பாடி என்ற பெயர், நாளடைவில் ஈச்சம்பாடி என்றானது. கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி,தென்னந்தோப்புகளுக்கு மத்தியில், இன்றும் பசுமை மாறாத, அமைதியான கிராமம் ஈச்சம்பாடி. இந்த கிராமத்தைச்சேர்ந்த ஏராளமானோர், வெளியூர்களுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், இன்று, 30க்கும் குறைவான குடும்பத்தினரே இங்கு வசிக்கின்றனர்.

கிராமத்தின் தென்மேற்கில், விஜயவல்லி உடனுறை விஜயராகவபெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சிதைந்து வழிபாடு இன்றி காணப்பட்ட கோவில், தற்போது சீரமைக்கப்படுகிறது. கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்களின், 100 ஆண்டுகளுக்கும் மேலான தேடலில், ஈச்சம்பாடியை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். பூர்வீக கிராமத்தில்,பாழடைந்து கிடக்கும் விஜயராகவபெருமாள் கோவிலை புனரமைக்கும், முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த , 2012ல், கோவிலின் சிதைந்து கிடந்த கட்டுமானங்களை முறையாக அடையாளம் கண்டு, ஒவ்வொரு கல்லுக்கும் தனி எண் எழுதி அவற்றை வரிசைப்படுத்தினர். இந்த பணியில், மாமல்லபுரம் சிற்பக்கலை வல்லுனர் ஜி.ஸ்ரீதரன், தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிதைந்து கிடந்த கோவிலின் கற்கள் வரிசைப்படி தனி அடையாளத்துடன் பிரிக்கப்பட்டன. இதற்கான பணியில் ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பின், ஆகம விதிகளுக்கு உட்பட்டு, பழைய கோவிலின் அமைப்பில் எந்த வித மாற்றமும் இன்றி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில், விமான கோபுரம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது, முன் மண்டபம் எழுப்பும் பணி நடந்து வருகிறது. கோவில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள, டிரஸ்ட் நிர்வாகி ரமணி கூறியதாவது: ஈச்சம்பாடி கிராமத்தில் இருந்து, திருப்பதிக்கு இடம்பெயர்ந்தவர்களில்,
ஈசாண்டான் என்பவரும் ஒருவர். இவர், திருமலை நம்பியின் மகளை மணந்தார் என, கூறப்படுகிறது. இவரது வம்சத்தில் வந்தவர்கள், திருமலை ஈச்சம்பாடி வம்சத்தினர். கடந்த , 150 ஆண்டுகளாக ஈச்சம்பாடி எனும் கிராமத்தை, இந்த வம்சத்தைச்சேர்ந்த எங்களின் மூதாதையர் தேடி வந்தனர். ஆனால், இப்போது உள்ளது போன்ற வசதிகள் அவர்களுக்கு கிடைக்காததால், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த , 1940களில் இது குறித்து வெளியான சில கட்டுரைகளில், வேலுார் மாவட்டம் , சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் நரசிம்மர் மலைக்கோவில், திவ்யதேசங்களில் ஒன்று. அந்த ஷேத்திரத்திற்கும், திருமலை திருப்பதிக்கும் இடையே அமைந்துள்ளது, ஈச்சம்பாடி என்ற குறிப்பு உள்ளது. அதன்படி,தற்போது நாங்கள் இந்த ஈச்சம்பாடி கிராமத்தை கண்டறிந்தோம். நான்கு ஆண்டுகளுக்கு முன், நாங்கள் வந்து பார்த்த போது, இந்த கோவிலின் மண்டபங்கள், விமான கோபுரம் உள்ளிட்டவை சிதைந்து, கற்கள் சிதறிக்கிடந்தன. மூலவர் விஜயராகவ பெருமாள் மற்றும் விஜயவல்லி தாயார் சிலைகள், அருகில் உள்ள சிவாலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. 1,000 ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை, மீண்டும் புனரமைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !