ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: பக்தர்களுக்கு வழங்க 54 ஆயிரம் லட்டு தயாரிப்பு
நாமக்கல்: நாமக்கல், ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசிக்காக, 54 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல், ரங்கநாதர் கோவிலில், வரும், 8ல், வைகுண்டஏகாதசி விழா கொண்டாப்படுகிறது. அன்று அதிகாலை, 4:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் பாதுகாப்புக்காக கோவில் படிவாசலில் பந்தல் அமைத்து, ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு, 54 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படவுள்ளன. அதற்காக, கோவில் மண்டபத்தில், 20 பேர் கொண்ட தொழிலாளர்கள், நாமக்கல் அடுத்த, பொட்டணத்தை சேர்ந்த தேவகுரு தலைமையில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அவர் கூறியதாவது: நேற்று முன்தினம் லட்டு தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்காக, 1,250 கிலோ சர்க்கரை, 650 கிலோ கடலை மாவு, 30 டின் ஆயில், 15 கிலோ முந்திரி, 20 கிலோ திராட்சை, 120 கிலோ கற்கண்டு, 130 கிலோ நெய், ஆறு கிலோ ஏலக்காய் மற்றும், ஐந்து கிலோ கிராம்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் இப்பணி நிறைவடையும். மொத்தம், நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.